மேக் அப் ராணிகளுக்கு ஒரு எச்சரிக்கை! (Post No.16,404)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,404

Date uploaded in London –17 November 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

15-11-26 தினமணி நாளிதழில் வெளியாகியுள்ள கட்டுரை!

மேக் அப் ராணிகளுக்கு ஒரு எச்சரிக்கை!

ச. நாகராஜன்

மேக் அப் செய்யாமல் வெளியில் கிளம்பும் பெண்கள் இந்தக் காலத்தில் அரிதாகவே காணப்படுவர்.

காஸ்மெடிக்ஸ் எனப்படும் ஒப்பனைப் பொருள்களின் விற்பனை உலகெங்கும் மிகவும் அதிகம். 2025ம் ஆண்டின் புள்ளி விவரப்படி உலகெங்கும் இந்த விற்பனை 80000 கோடி அமெரிக்க டாலரை எட்டி விட்டது என்பது மலைக்க வைக்கும் உண்மை.

இந்த ஒப்பனைப் பொருள்களின் தயாரிப்பை சரி பார்த்து அங்கீகாரம் அளிக்க் துரதிர்ஷ்டவசமாக உலகில் எந்த அரசாங்கமும் முன் வரவில்லை.

இதனால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கூட பல அபாயகரமான இரசாயனப் பொருள்களை ஒப்பனைப் பொருள்களில் தயாரிப்பாளர்கள் கலக்கின்றனர்.

இந்த கெமிக்கல்களால் தோல் சம்பந்தமான நோய்கள் பெண்களைப் பீடிக்கிறது. தோலின் வழியே உள்ளே புகும் கெமிக்கல்கள் இரத்தத்துடன் கலக்கின்றன.

இவைகள் புற்று நோய், உட்சுரப்பு தொகுதியை சீர்குலைத்து ஹார்மோன் டிஸ்ஆர்டர் வியாதிகள், மூளைக் கோளாறுகள், தலை சுற்றல் உள்ளிட்ட வியாதிகளை உருவாக்குகின்றன.

டால்க் (Talc) எனப்படும் மாக்கல் அல்லது சீமை சுண்ணாம்புக்கல் ஆபத்தில்லாதது தான் என்றாலும் அத்துடன் கான்ஸரை உருவாக்கும்

அஸ்பெஸ்டாஸைக் கலப்பதால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.  சில ஒப்பனைப் பொருள்களில் அஸ்பெஸ்டாஸை சில தயாரிப்பாளர்கள் கலப்பதை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும்.

கடையில் சாதாரணமாக வாங்கும் சில ஒப்பனைப் பொருள்களில்            ட்ரைக்லோஸன் சில பாக்டீரியாக்களைத் தவிர்ப்பதற்காக பல தயாரிப்பாளர்களால் கலக்கப்படுகிறது. டூத் பேஸ்ட், சில வகை சோப்புகள், பாடி வாஷ் தயாரிப்புகள் ஆகியவற்றில் இந்தக் கலப்பைக் காணலாம். இது அதிக அளவில் இருந்தால்  தைராய்ட் ஹார்மோனை பாதிக்கிறது என்பதோடு நோய் எதிர்ப்பு சக்தியையும் குறைக்கிறது என்று அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA- Food and Drug Administration) அறிவித்துள்ளது.

காரீயம் பல மேக் அப் சாதனங்களில் கலக்கப்படுகிறது. குறிப்பாக கண் ஒப்பனையில் கலக்கப்படும் இது கண்களை பாதிக்கும்,

பாதரஸம் மற்றும் திம்ரோஸல் ஆகியவை நரம்பு மண்டலத்தைப் பாதிப்பதோடு சிறுநீரகத்தையும் சேதப்படுத்துகிறது.

இதுவும் பல ஒப்பனைப் பொருள்களில் சேர்க்கப்படுகிறது.

அட, நகப்பூச்சுகளில் கூட கெமிக்கல் கலப்படம் உண்டு. ஹேர் ஸ்ப்ரே மற்றும் நெய்ல் பாலிஷ்களில் கலக்கப்படும் ப்தலேட்ஸ் (Phthalates) மார்பகப் புற்றுநோயிலிருந்து பல ஆபத்தான வியாதிகளை உருவாக்கும்.

பாராபென் என்ற பூச்சுகளின் ஆயுள் காலத்தை நீடிக்க வைக்கும் ப்ரிஸர்வேடிவ் மார்பகப் புற்றுநோயை உருவாக்கும் அபாயம் கொண்டதாகும்.

சில லோஷன், ஷாம்பூக்களில் ஃபார்மல்டீஹைட் (Formaldehyde) கலக்கப்படுகிறது. இது எரிச்சலையும் ஒவ்வாமையையும் பெண்களிடத்தில் உருவாக்குகிறது.

நெய்ல் பாலிஷில் கலக்கப்படும் டோலுன் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கிறது.

கார்பன் ப்ளாக் கண்களில் இமைகளில் பூச்சாக உபயோகபடுத்தப்படுகிறது. லிப்ஸ்டிக்கிலும் இது உண்டு, வண்ணத்தைக் கொடுப்பதற்காக சேர்க்கப்படும் இதுவும் அபாயம் விளைவிக்கும் ஒன்று தான். விஞ்ஞானிகள் இதை மிருகங்களிடம் பல சோதனைகளை நடத்துவதற்காகப் பயன்படுத்துகிறார்கள்.

இப்படி இன்னும் பல கெமிக்கல்கள் கலக்கப்படுகின்றன, அம்மணிகளே, உங்கள் ஒப்பனைப் பொருள்களில். ஆகவே ஜாக்கிரதையாக இவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஏராளமான ஒப்பனைப் பொருள்களை டிரஸ்ஸிங் டேபிளில் அடுக்கி வைக்க வேண்டாம்.

லேபிள்களை உன்னிப்பாகக் கவனித்து சரிபார்த்து தேவையற்ற கெமிக்கல்கள் இருப்பதைக் கண்டால் அவற்றை வாங்கக் கூடாது.

சுத்தமானவை, ஆர்கானிக் என்று விளம்பர வாசகங்கள் இருந்தாலும் அதை உடனே நம்பகமானது என்று நம்பி விட வேண்டாம். அந்தத் தயாரிப்பில் எந்தெந்த கெமிக்கல்கள் இருக்கின்றன என்று கவனிக்க வேண்டும்.

ஆர்கானிக் சான்றிதழ் இருக்கிறதா, நம்பகமான நல்ல பாரம்பரியமான நிறுவனத்தின் தயாரிப்பு தானா என்பதைப் பார்த்து வாங்க வேண்டும்.

கண்களுக்கான ஒப்பனைப் பொருள்கள், தோல் பூச்சு, உதடுப் பூச்சு உள்ளிட்ட எதை வாங்கினாலும் மறைந்திருக்கும் அபாயம் அதில் இருக்கிறதா என்று பார்த்து வாங்குங்கள் நவநாகரிக நாரீமணிகளே!

அழகை மெருகூட்டிப் பாதுகாக்க வேண்டியது அவசியம் தான்; அத்தோடு உடல் ஆரோக்கியம் அதை விட முக்கியம் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும், அல்லவா!

வாழ்த்துக்கள் மேக் அப் ராணிகளே, வாழ்த்துக்கள்!

***

Leave a comment

Leave a Reply