ஶ்ரீ சக்ர பாவனைகளை விளக்கும் பாவநோபநிஷத்! – 2 (Post No.16,409)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,409

Date uploaded in London –19 November 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ஶ்ரீ சக்ர பாவனைகளை விளக்கும் பாவநோபநிஷத்! – 2

ச. நாகராஜன்

20. ரேசகம் முதல் மோஹகம் ஈறாகவுள்ள பத்து அக்னி கலைகளே அந்தர்த்தசார சக்ரத்திலுள்ள ஸர்வக்ஞாதி பத்து சக்திகளாவர்.

21. சீதம், உஷ்ணம், சுகம், துக்கம், இச்சை, ஸத்வம், ரஜஸ், தமஸ் என்பனவே எட்டு அஷ்டகோண சக்ரத்தின் சக்திகளாகிற வசினீ  முதலியவராவர்.

22. சப்தம், ஸ்பரிசம், ரூபம், ரஸம், கந்தம் என்னும் பஞ்ச தன்மாத்திரைகளே ஐந்து புஷ்ப பாணங்கள்.

23. மனமே கரும்புவில்.

24. ராகமே (ஆசை) பாசம்.

25. துவேஷம் அங்குசமாகும்.

பாசாங்குச தனுர்ப்பாணங்கள் பரதேவதையின் ஆயுதங்களாகும்.

26. அவ்யக்தம், மஹத் தத்வம், அஹங்காரம் என்பவையே காமேஸ்வரீ, வஜ்ரேஸ்வரீ, பகமாலினீ என்னும் மத்திய த்ரிகோண சக்திகளாவர்.

27. நிருபாதிக ஞானமே காமேஸ்வரர்.

28. ஸதா ஆனந்தகனமாயுள்ள ஆத்ம ஸ்வரூபமே பரதேவதையாகும் லலிதை.

29. பரதேவதையின் செம்மை நிறமானது எல்லாவற்றின் விமர்சம் என்னும் விசாரணையேயாம்.

30. அநன்ய (பேதமற்ற) சித்தத்தினாலேயே ஸர்வ ஸித்திகள் ஏற்படும்.

31. அடிக்கடி அநுஸந்தானம் செய்வதே உபசாரங்களாகும்.

32. நான், நீ, உண்டு, இல்லை, செய்யத்தக்கது, செய்யத்தகாதது, உபாஸிக்கத்தக்கது என்னும் விகற்பங்களை எல்லாம் ஆத்மாவில் லயம் செய்தலே ஹோமமாகும்.

33. இந்த பாவனோபநிஷத்தில் ஒன்று முதல் முப்பத்திரண்டு வாக்கியங்களில் கூறப்பட்ட குருபாவனை முதல் ஹோமாந்தமான பாவனைகளின் பரஸ்பர பேதங்களையொழித்து அபேதபாவனை செய்தலே தர்ப்பணம் எனப்படும்.

34. காலமானது பதினைந்து திதிகள் வடிவமாய்ப் பரிணமித்திருக்கிறது என்பதை உணர்தல் அவசியம்.

35. இங்ஙனம் மூன்று முகூர்த்தங்கள் அல்லது இரண்டு முகூர்த்தங்கள் அல்லது ஒரு முகூர்த்தம் பாவிக்கும் சாதகன் ஜீவன்முக்தன் ஆகிறான். அவனே சிவ யோகி என்று கூறப்படுபவன்.

36. காதி மதரீதியாய் அந்த சக்ர பாவனைகள் பிரதிபாதிக்கப்பட்டன.

37. எவன் இங்ஙனம் அறிகின்றானோ அவன் “அதர்வ சிரஸ்ஸை” அத்யயனம் செய்தவன் ஆகின்றான்.

இதுவே பாவனோபநிஷத்தின் சுருக்கமாகும்.

ஶ்ரீ சக்ரமானது சிவசக்திகளின் ஐக்கிய ரூபமாகும்.

சிவ சக்ரங்கள் நான்கு. அவை பிந்து, அஷ்டதள கமலம், பதினாறு தள கமலம், பூபுரம் என்பன.

சக்தி சக்ரங்கள் ஐந்து. அவையே மத்திய முக்கோணம், அஷ்டகோணம், உள்தசாரம், வெளித்தசாரம், பதினான்கு கோணம் என்பனவாம்.

இவற்றுள் முக்கோணத்தைப் பிந்துவோடும், அஷ்டகோணத்தை அஷ்டதள கமலத்தோடு, உள், வெளி என்னும் இரண்டு தச கோணங்களைப் பதினாறு தள கமலத்தோடும், பதினான்கு கோணத்தைப் பூபுரத்தோடும் ஐக்கியப்படுத்தி சிவ சக்திகளின் ஐக்கியத்தை உணர்தல் வேண்டுமென்பது சம்பிரதாயமாகும். சக்தியைச் சிவத்தோடு ஐக்கியம் செய்வது தான் ஜீவப்பிரஹ்ம ஐக்கியம் எனப்படும்.

சித்சக்தி அல்லது பிரஹ்ம வித்தியோபாஸனா மார்க்கமாய், ஹயக்ரீவர், வியாசர், துர்வாஸர், அகஸ்தியர், தத்தாத்ரேயர், வசிஷ்டர் முதலிய ரிஷிகளும் கோரக்ஷநாதர், மத்ஸ்யேந்திரநாதர் முதலிய சகல சித்தர்களும், காளிதாஸர், ஶ்ரீ சங்கர பகவத் பாதர் முதலிய பெரியோர்களும் நித்தியானந்தப் பெருவாழ்வை அடைந்துள்ளார்கள்.

இது பற்றி இன்னும் விவரமாக அறிய விரும்புவோர்

ஞானார்ணவம், தந்திரராஜம், தந்த்ரஸாரம், மாத்ருகா சக்ர விவேகம், ஸௌபாக்ய ரத்னாகரம், யோகினீ ஹ்ருதயம் (வாமகேச்வர தந்த்ரம்), காம கலா விலாசம், வரிவஸ்யா ரஹஸ்யம், திவ்ய மங்கள த்யானம் முதலான நூல்களை குரு முகமாகச் சிரவணம் செய்யலாம்.

**                     முற்றும்

Leave a comment

Leave a Reply