
Post No. 8764
Date uploaded in London – –2 OCTOBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
தொல்காப்பியத்தில் வடதிசை பற்றி முதலில் சொன்னது ஏன் ?—2(Post.8764)
கட்டுரையின் முதல் பகுதி நேற்று வெளியாகியது . நல்ல காரியங்களை முடிவு செய்யும்போது கிழக்கு அல்லது வடக்கு திசையை நோக்கி உட்கார்ந்து அல்லது நின்று கொண்டு முடிவு செய்தல் மரபு என்ற அரிய விஷயத்தை நச்சினார்க்கினியர் குறிப்பிட்டதை நேற்று பார்த்தோம்.
உரை எழுதுவதில் மன்னன் நச்சி. .அவரை “உச்சி மேற் புலவர் கொள் நச்சினார்க்கினியர்” என்று ஆய்ந்தவிந்தடங்கிய கொள்கைச் சான்றோர் போற்றுவர். அவர் மேலும் ஒரு அதிசயச் செய்தியை சொல்கிறார்.

தொல்காப்பிய நூல் பாயிரத்தில் ‘வட வேங்கடம் தென் குமரி’ என்று ஏன் வடதிசையை முதலில் வைத்தனர் என்ற விவாதத்தில் நச்சினார்க்கினியர் கூறும் மேலும் ஒரு கருத்து இதோ :–
“தென்புலத்தார்க்கு வேண்டுவன செய்வார் தெற்கும் மேற்கும் நோக்கிக் கருமங்கள் செய்வார் ஆதலின் கூறப்பட்டது” என்கிறார்.
இதில் அதிசயம் என்ன வென்றால் தெற்கு யமனுடைய திசை என்பதும் தென்புலத்தார் என்பவர் இறந்து போன நம்முடைய முன்னோர்கள் என்பதும் வேதங்களிலும் சங்க இலக்கியங்களிலும் அதற்குப்பின் வந்த திருக்குறளிலும் உளது ;ஆனால் மேற்கு பற்றி நச்சினார்க்கினியர் சொல்லும் கருத்து எகிப்திய நாகரீகத்தில்தான் உளது.
சூரியன் மறையும் இருண்ட திசை; அதனால் அதை இறந்தோர்க்கு ஒதுக்கினர் என்று சிலர் விளக்கம் காணக்கூடும்; அது சரியல்ல என்பதற்கு நான் சொல்லும் காரணங்கள் இதோ :-
1. எகிப்திய பெயர்கள்- தமிழ் பெயர்கள் இடையே ஒற்றுமை உளது.
2.எகிப்திய முத்திரைகள் தமிழ் சித்தர்கள் முனிவர்கள் முத்திரை போல உளது.
3. எகிப்திய குள்ளர் தந்தத்தில் கிடைத்தது இந்திய முனிவர் போல உள்ளது
4. மிக முக்கியமாக, சூரியனை வானத்தில் ஓடும் படகு/ ஓடம் என்ற வர்ணனை அகநாநூற்றிலும் (மாமூலனார் பாடல்) எகிப்திலும் உளது. சம்ஸ்க்ருத இலக்கியத்தில் சூரியன் 7 குதிரை பூட்டிய ஒரு சக்கரத் தேரில் ஊர்பவன் என்ற கருத்தே உளது. அதையும் தமிழ் இலக்கியத்தில் காணலாம்.
5. இதைவிட முக்கியமாக ஆத்மாவை கூண்டுப் பறவை (Cage bird) என்ற வர்ணனையை திருக்குறளிலும் எகிப்திலும் காணப்படுகிறது; பகவத் கீதை போன்ற நூல்களில் பழைய உடைகளுக்கே உடல் ஒப்பிடப்படுகிறது. பறவைக் கூண்டுக்கு அல்ல.
6. திருமூலர் கருத்து எகிப்தில் இருப்பதையும் முன்னர் கட்டுரைகளில் கண்டோம்.
சுருக்கமாகச் சொன்னால் சம்ஸ்கிருத நூல்களில் உள்ள கருத்துக்களோடு, கூடுதல் எகிப்திய – இந்திய ஒற்றுமையைக் காணப்படுகிறது. நச்சி . சொல்லும் இறந்தோர் திசை மேற்கு எனபது புதிய விஷயம்.
யக்ஷர்கள் (Hyksos) எகிப்து மீது படை எடுத்த விஷயம், தசரதன் எழுதிய கடிதங்கள் (Amarna Letters) எகிப்தில் இப்பொழுதும் மியூசியத்தில் உள்ளது என்பதெல்லாம் நான் முன்னரே எழுதிய விஷயங்கள்தான்.
***

வடக்கு உணர்ந்தே தெற்கு உணரப்படுதலின் பிற்கூறப்பட்டது என்பர் அரசஞ் சண்முகனார்.
இனி தொல்காப்பிய பாயிரத்திலுள்ள பிற சுவையான செய்திகளைக் காண்போம்.
வட வேங்கடம் என்பது திருப்பதி வேங்கடாசலபதி உறையும் புனித மலை ; குமரித் துறையோ புனித நீராடும் துறை. (தேவாரத்திலும் சிலப்பதிகாரத்திலும் காண்கிறோம்). இதனால்தான் — புனிதம் கருதித்தான் — இதைக் குறிப்பிட்டனர் என்று மிகப் பழைய உரை ஆசிரியரான இளம்பூரணர் எழுதுகிறார். சுருங்கச் சொன்னால் தமிழர்கள் என்பவர் இந்துக்களே ; சம்ஸ்கிருத நூல்களில் உள்ள கருத்துக்களே இமயம் முதல் குமரி வரை உள்ளதும என்று அடித்துப் பேசுகிறார் இளம்பூரணர். அதாவது தமிழையும் இந்துமதத்தையும் பிரிக்க எண்ணுவோருக்கு சாவுமணி அடிக்கிறார்.
நச்சினார்க்கினியர் மேலும் ஒருபடி போகிறார் :-
“நிலங்கடந்த நெடுமுடியண்ணலை நோக்கி உலகந் தவஞ்செய்து வீடு பெற்ற மலையாதலானும் , எல்லாராலும் அறியப்படுதலானும் வேங்கடத்தை எல்லையாகக் கூறினார் . குமரியும் தீர்த்தமாகலின் எல்லையாகக் கூறினார். இவ்விரண்டும் காலையே ஓதுவார்க்கு நல்வினை (புண்ணியம்) உண்டாம் என்று கருதிக் கூறினார்” .
ஆக, மதுரை நகர பாரத்துவாஜ கோத்ர ப்ராஹ்மணன் நச்சினார்க்கினியர் இங்கே மேலும் ஒரு புதிய செய்தியை நமக்கு அளிக்கிறார். இந்துக்கள் 7 புனித நதிகள், 7 புனித நகரங்கள், 7 சிரஞ்சீ விகள் , 7 புனிதக் காடுகள், 5 புண்ய ஸ்திரீக்கள்/பெண்கள் பெயரை தினமும் காலையில் பிரா த ஸ்மரணத்தில் சொல்லுவார்கள். இன்றும் ஆர் எஸ் எஸ் ஷாகாக்களில் இதைக் கேட்கலாம். பல லட்சம் இந்துக்கள் தினமும் காலையில் சொல்லுவர்; இதில் இல்லாதவை குமரியும் வேங்கடமும். 7 என்பது ஒரு தொடக்கம்தான் . அவற்றைச் சொல்லுகையில் அதுபோன்ற பல்லாயிரம் புனிதம் மிக்க என்ற பொருளும் தொனிக்கும். அதில் குமரி , வேங்கடம் என்ற பெயரைக் காலையில் சொன்னால் புனிதம் என்பதால்தான் தொல்காப்பியத்தில் – பாயிரத்தில் – அது இடம்பெற்றது என்பது நச்சி. தரும் நல்ல செய்தி ; அவரை மெச்சிப் போற்றுவோம்.
****

இவ்வாசிரியர் ‘அகத்தியனார்க்குத் தமிழை செவியறிவுறுத்திய செந்தமிழ்ப் பரமாசாரியனாகிய அறுமுகக் கடவுள் வரைப்பென்னும் இயைபு பற்றி என்பது’ எனக்கூறுவர்.
(இவ்வாசிரியர் என்பது தொல்காப்பிய விருத்தி ஆசிரியர் மாதவ சிவஞான யோகிகள்/ முனிவர் என்று நான் நினைக்கிறேன் . முனிவரின் சொற்களுக்கு தண்டபாணி தேசிகர் கூறும் விளக்கப் பகுதியில் இவை உள்ளன )
****
அரசஞ் சண்முகனார் கருத்து :-
“வேங்கட மலையின் வடக்கிலிருந்து இமயமலை வரை ஆரியமும், வேங்கட மலையின் தெற்கிலிருந்தது குமரிமலை வரைத் தமிழும் பரவியிருந்த படியா லும், அக்காலத்து வடதிசைக்கண் கங்கை யாறும் இமயமலையும் போல தென்றிசைக்கண் பஃறு ளி யாறும் குமரி மலையும் எல்லோரானும் அறியப்பட்டுக் கிடந்தமையின் வடக்கும் தெற்கும் பிறவெல்லையும் உளவாக அவற்றைக் கூறாமல் , எல்லாரும் உணர்தற்பொருட்டு மறைவின்றி நெடுந்தூரந் தோன்றற்பாலவாகிய மலைகளைக் கூறினார் என்பர் .
****

முடிவுரை
இதிலிருந்து நாம் பெறும் கருத்துக்கள் என்ன?
தமிழ் மொழி எக்காலத்தும் வட வேங்கட மலைக்கு அப்பால் — திருப்பதிக்கு அப்பால் வழங்கவில்லை. எமனோ, பர்ரோ , ஐராவதம் மகாதேவன் , அசுகோ பர்போலா சொல்வதெல்லாம் மஹா ‘பேத்தல்- உளறல்’;. வட திராவிட மொழிகள், மத்திய திராவிட மொழிகள், தென் திராவிட மொழிகள் என்பனவெல்லாம் மஹா ‘கப்ஸா’ . அங்குள்ள தமிழ் சொற்கள் என்று அவர்கள் கூறுவது போல உலகில் வேறு எந்த இரண்டு பழைய மொழிகளிலும் நான் சொற்களையும் காட்ட முடியும்; இலக்கண விதிகளையும் காட்ட முடியும் . அவையெல்லாம் ஒரு மொழியின் 100 சதவிகிதத்தில் 2 அல்லது 3 விழுக்காடே. ஜப்பானிய, கொரிய , ஆஸ்திரேலிய, ஆப்பிரிக்க செனகல் மொழிகளை ஒப்பிடும் கட்டுரைகளை படிக்கையில் எனக்கு சிரிப்புதான் வரும். உண்மையான நெருக்கம் தமிழுக்கும் சம்ஸ்கிருதத்துக்கும்தான் என்பதை சந்தி / புணர்ச்சி விதிகள் காட்டுகின்றன. தேவாரமும் திருவிளையாடல் புராணமும் இரு மொழியும் ஒரே இடத்தில் தோன்றியவை என்பதைக் காட்டும்.
இரண்டாவது முக்கிய விஷயம், தமிழை சிவன், முருகன், அகத்தியனிடமிருந்து எவனாலும் பிரிக்க முடியாது. பழைய உரைகாரர்கள் அனைவரும் இதை ஆதரிக்கின்றனர். தேவாரமும் திருவாசகமும் திவ்வியப்பிரபந்தமும் தெய்வத் தமிழ் என்பதை மீண்டும் மீண்டும் செப்புகின்றன.
மூன்றாவது முக்கிய விஷயம், இமயம் முதல் குமரி வரை புனித பூமி; நச்சி. சொல்லுவது போல ‘வடவேங்கடம் தென்குமரி’ என்று தொல்காப்பியத்தை படிக்கத் துவங்கினாலேயே புண்ணியம்!!
கட்டுரையை முடிப்பதற்கு முன்பாக ஒரு எச்சரிக்கை. ‘ஆரியம்’ என்ற சொல் தேவாரம் முதல் தொல்காப்பிய விருத்திவரை காணப்படும் . இதன் பொருள் “பண்பட்ட” (மொழி, மக்கள் ) என்பதேயாம் என்பதை சங்க இலக்கிய தேவார உரைகளை படிப்போர் அறிவர் . கால்டு வெல்களும் மாக்ஸ்முல்லர்களும் பயன்படுத்தும் ‘விஷமேற்றிய சொல்’ (Polluted/poisoned) அல்ல. நேற்று வந்த கழிசடைகளை ஒதுக்கி விட்டு பழந்தமிழ் உரைகாரர்களை நம்புவோமாக.
வாழ்க தமிழ் !!
–சுபம்–

tags- வட திசை -2, தொல்காப்பியம் , நச்சினார்க்கினியர்
You must be logged in to post a comment.