
Written by London Swaminathan
Date: 7 August 2017
Time uploaded in London- 16-00
Post No. 4137
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
கிரேக்கம் எனப்படும் கிரீஸ் நாட்டில் 2500 ஆண்டுகளுக்கு முன்னரே நாடகங்கள் சிறப்பிடம் பெற்றன. இதற்கு அடுத்தபடி நாடகங்களுக்குப் பெயர்பெற்ற நாடு இந்தியா என்று சொல்ல வேண்டும். ஆனால் இப்போது கிடைக்கும் தகவல்களின் அடிப்படியிலேதான் இந்த தகவல். மேலும் அவர்கள் எழுதிய நாடகங்களில் சில நாடகங்களே கிடைத்துள்ளன. நம் நாட்டில் பாஷா எழுதிய 13 நாடகங்கள் கிடைத்துள்ளன. அதற்குப் பின்னர் காளிதாசன் எழுதிய மூன்று நாடகங்கள் கிடைத்தன.
காளிதாசனுக்கு முன்னர் வாழ்ந்த நீண்ட நாடக ஆசிரியர் பட்டியல் உள்ளது. இவர்கள் எழுதிய நாடகங்களின் பெயர் தெரியாது. மேலும் ஆதிகாலத்தில் நடனம் மூலம் நாடகங்கள் நடிக்கப்பட்டன. சிலப்பதிகாரத்தில் வரும் மாதவியின் 11 கூத்துகளும் புராணக்கதைகளே. நடனம்- நாட்டியம் இவை இரண்டும் கலந்தே இருந்ததால் நாம் கிரேக்கர்களையும் விஞ்சி இருக்கக்கூடும்!
இரண்டு கிரேக்க ஆசிரியர்கள் மொத்தம் 220 நாடகங்கள் எழுதியதாகப் பிற்காலத்தில் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
100 நாடகம் எழுதிய மெனாண்டர் (மீனேந்திரன்)
இவர் ஒரு நகைச்சுவை நாடக ஆசிரியர். இவரைப் பற்றி மற்றவர்கள் எழுதிய நூல்களிலிருந்தே தெரிந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக 1957ல் எகிப்தில் பேபைரஸ் புல் காகிதங்களில் இவர் எழுதிய நாடகத்தில் சில வசனங்கள் காட்சிகள் மட்டும் கிடைத்தன. இரண்டு ரோமானிய நாடக ஆசிரியர்கள் இவருடைய நாடகங்களைத் தழுவி நாடகங்கள் எழுதினர்.
பணக்கார குடும்பத்தில் பிறந்த மெனாண்ட (Menander) ரின் தந்தை ஒரு புகழ்பெற்ற அரசியல்வாதி என்றும் அறிகிறோம். அவரது உறவினர் ஒருவர், அக்கால நாடக ஆசிரியர்களின் நண்பர். இதன் மூலம் இவருக்கும் உத்வேகம் பிறந்தது.
இவர் பிறந்த ஆண்டு – கி.மு.342
இவர் இறந்த ஆண்டு- கி.மு. 291
இவர் பிறப்பதற்கு நூற்றுக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே
கிரேக்கர் வாழ்வில் நாடகங்கள் இரண்டறக் கலந்தன.
அவ்வப்பொழுது நாடகப் போட்டிகள் நடக்கும். ஆண்டுதோறும் ஒருவருக்குப் பரிசும் அளிப்பர். மெணான்டருக்கு முன் சோக நாடகங்களே எழுதப்பட்டன. அரிஸ்டோபனிஸ் (Aristophones) என்பவர் பழைய பாணியில் எழுதினார். மெனாண்டர் புதிய பாணியில் எழுதினார்.
இவர் எழுதிய பாணியை பாமர மக்கள் ரசிக்க முடியாது. இவர் எழுதிய ‘மூர்க குணமுள்ள மனிதன்’ என்ற நாடகம் மட்டுமே கிடைத்தது. கோபம், குட்டை முடியுடைய பெண் முதலிய நாடகங்களின் துண்டுகள் மட்டுமே கிடைத்தன.
நூறு நாடகங்களை எழுதியும் எட்டே முறை மட்டுமே இவர் பரிசுகள் பெற்றார்.
120 நாடகங்கள் எழுதிய சோபோக்ளிஸ் (சோகக் க்ளேசன்)
இவர் ஏதென்ஸ் அருகிலுள்ள கொலனஸ் (Colonus) என்ற ஊரில் செல்வந்தக் குடும்பத்தில் பிறந்தார். ஏஸ்கைலஸ் (Aeschylus) எழுதிய சோக நாடகங்களால் ஈர்க்கப்பட்டார். நாடகங்கள் மூலம் சமய மற்றும் அரசியல் விஷயங்கள் சித்தரிக்கப்பட்டன. கிரேக்க புராணக் கதைகளைக் கொண்டு அன்றாடப் பிர்ச்சினைகளை விமர்சித்தனர்.
சோபோக்ளிஸ் வாழ்ந்த காலத்தில் ஏதென்ஸ் நகர அரசுக்கும் ஸ்பார்ட்டா நகர அரசுக்கும் இடையே (Peloponnesian பெலபொனேச்சியன்) யுத்தம் நடந்தது. இதனால் இவரது நாடகங்களில் தேசபக்தி சுடர்விட்டுப் பிரகாசிக்கிறது. இவர் பிற்காலத்தில் சமாதானத்துக்காக வாதடினார். இவர் எழுதிய ஆண்டிகோனெ என்ற நாடகத்தில் போரினால் ஒருவர் மன நிலையில் எழும் தர்ம-அதர்மப் போராட்டம் பற்றி வெகுவாக சிலாகித்து இருந்தார். இத இவரது புகழை உச்சத்துக்கு இட்டுச் சென்றது. மக்கள் இவரை தளபதியாகவும்,சட்ட சபை உறுப்பினராகவும் தேர்ந்தெடுத்தனர்.
இவர் பிறந்த ஆண்டு – கி.மு 496
இவர் இறந்த ஆண்டு- கி.மு. 406
ஆண்டுதோறும் நடைபெறும் நாடகப் போட்டியில் கி.மு.486ல் இவர் இடம்பெற்றார். அந்தப் போட்டியில் இவர் முதல் பரிசு பெற்றது ஏதென்ஸ் நகரத்தில் அதிர்வலைகளை எழுப்பியது. அது வரை பரிசுபெற்று வந்த புகழ்பெற்ற ஏஸ்கைலஸை (Aeschylus) இவர் தோற்கடித்ததே இந்த வியப்புக்குக் காரணம்; மேலும் அப்போது சோபோக்ளிசுக்கு வயது 27 தான்.
120 நாடகங்களை எழுதிய இவர் 24 முறை முதல் பரிசு வென்று சாதனை படைத்தார்.
இவர் எழுதிய நாடகங்களில் ஏழு மட்டுமே இப்பொழுது கிடைத்தன.
இவரைப் பற்றிய ஒரு சுவையான சம்பவம் உண்டு. தனது தந்தைக்கு வயதாகிவிட்டதால் வியாபாரத்தைச் சரியாக கவனிப்பதில்லை. ஆகையால் எல்லாப் பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்க வேண்டும் என்று சோபோக்ளிசுக்கு எதிராக மகன்கள் வழக்கு தொடுத்தனர். நீதி மன்றத்துக்கு அவர் வந்த போது அபோதுதான் எழுதி முடித்த ஈடிபஸ் அட் கொலனஸ் (Oedipus at Colonus) என்ற நாடகம் இருந்தது. அதைப் பார்காமலேயே ஒப்பித்துவிட்டு எனக்கு வயதுக் கோளாறு இருந்தால் இப்படிச் செய்ய முடியுமா? என்று கேட்டார். அதைப் பார்த்த நடுவர்கள் அசந்தே போய்விட்டனர். அவரை வழக்கிலிருந்து விடுவித்தனர்.
–subham—























